கைது செய்யப்பட்டவர்கள் ஸ்ரீ சாரதா இந்திய மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஷ்வேதா ஷர்மா, பவ்னா கபில் மற்றும் கஜல் என தெரிய வந்துள்ளது. இவர்கள் மூவரும் பாலியல் குற்றத்திற்கு தூண்டுதல் அளித்தல், புகார் அளித்த மாணவிகளை அச்சுறுத்துதல் மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய குற்றங்களுக்காக காவலில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட பெண் நிர்வாகிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் பார்த்தசாரதியின் உத்தரவின் பேரிலேயே செயல்பட்டதாகவும், ஒழுக்கம் மற்றும் நேரத்தை கடைப்பிடிப்பது என்ற சாக்கில் மாணவிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
விசாரணை குழு, பெண் மாணவிகளுடன் பார்த்தசாரதி தங்கியதாக கூறப்படும் உத்தரகாண்ட் மாநிலம், அல்மோராவுக்கு சென்று விசாரணை நடத்தியது. அங்குள்ள உள்ளூர்வாசிகள் இந்த தகவலை உறுதிப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
குற்றம் கிட்டத்தட்ட நிரூபிக்கப்பட்ட பின்னரும், பார்த்தசாரதி எந்தவிதமான குற்ற உணர்ச்சியையோ அல்லது வருத்தத்தையோ காட்டவில்லை என்றும், கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் ஆய்வு உள்ளிட்ட விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.