காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த நபர் வெட்டி கொலை.. சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

Siva

வெள்ளி, 18 ஜூலை 2025 (08:10 IST)
சேலத்தை சேர்ந்த மதன் என்பவர் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் சமீபத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இதனை அடுத்து, அவர் சேலம் காவல் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிலையில், நேற்று அவர் தனது மனைவியுடன் கையெழுத்திட காலை 10 மணிக்கு ஹஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார். அதன் பிறகு, அவரும் அவருடைய மனைவியும் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள ஹோட்டலில் சாப்பிடச் சென்றனர்.
 
அப்போது, ஹோட்டலில் இருந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் திடீரென அவரை சூழ்ந்துகொண்டு சரமாரியாக கூர்மையான ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து மாயமாய் தப்பி சென்றுவிட்டனர். நிபந்தனை ஜாமீனில் வெளியாகி காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இது குறித்து தகவல் அறிந்த காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மதனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இது பழிவாங்கும் கொலையாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. 
 
மேலும், இந்தக் கொலையை ஆறு பேர் கொண்ட கும்பல் செய்திருக்கலாம் என்றும், தாக்குதல் நடத்தியவர்களை சிசிடிவி காட்சி மூலம் அடையாளம் காண முயற்சி செய்யப்பட்டு வருவதாகவும், விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்