போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதை அவசர மனுவாக விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இந்த மனுவின் விசாரணை இன்று பிற்பகல் இரண்டு பதினைந்து மணிக்கு நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஊதிய உயர்வு, அகவிலைபடியை தர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் பேருந்துகள் குறைவாக இயங்கி வருகிறது என்றும் இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகள் வேலை நிறுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் எனவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.