தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம், 15வது ஊதிய ஒப்பந்ததை இறுதி செய்வது உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இருமுறை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று அரசுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி நாளை வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. எனவே இன்று நள்ளிரவு முதல் பேருந்துகள் இயங்காது என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதுகுறித்து முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, குறைந்தபட்ச இந்த ஒரு கோரிக்கையைக் கூட ஏற்காத மனிதாபிமானமற்ற அரசாக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு இருந்து வருவது கடும் கண்டனத்திற்குரியத என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
"ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 96 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை சுமார் ரூ.2 ஆயிரம் கோடி உள்ளதாகவும், அதில் இந்த மாதத்தில் இருந்து அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கினால்கூட போதும் என்றும், அதற்கு ரூ.70 கோடி மட்டுமே ஆகும் என்றும், நிலுவையில் உள்ள 96 மாதகால அகவிலைப்படியையும் மற்றும் இதர கோரிக்கைகளையும் பொங்கலுக்குப் பிறகுகூட பேசிக் கொள்ளலாம் என்றும்,
அரசு தனது வீராப்பைக் காட்டாமல், லட்சக்கணக்கான மக்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு, போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுடைய குறைந்தபட்ச கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.