"மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், அவர் நேற்று கடலூரில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது, "விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டிற்கு அனுமதி அளிக்கவில்லை. திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டிற்கு அனுமதி அளிக்கவில்லை. கொடிக்கம்பம் நடுவதை கூட தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டு தி.மு.க. கூட்டணியில் இருக்க வேண்டுமா என சிந்தித்துப் பாருங்கள்" என்று பேசினார்.
"அ.தி.மு.க.வைப் பொருத்தவரை எங்கள் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்பு அளிப்போம் என்றும், கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தகுந்தவாறு சரியாக இருக்கும் என்றும், அடுத்து ஒரு பெரிய கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"பிரமாண்டமான அந்தக் கட்சி எங்கள் கூட்டணிக்கு வந்த பிறகு, எங்கள் கூட்டணி மிகவும் வலுவாகிவிடும் என்றும், பொறுத்திருந்து பாருங்கள் 234 தொகுதிகளில் 230 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைப்போம் என்றும், தனித்துதான் ஆட்சி அமைப்போம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.