எண்ணூர் அனல்மின் நிலையத்தில் பயங்கர விபத்து: 9 தொழிலாளர்கள் பலி.. பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

Siva

புதன், 1 அக்டோபர் 2025 (08:22 IST)
வடசென்னை அனல்மின் நிலையத்தின் விரிவாக்க பணியின் கட்டுமான தளத்தில் நிகழ்ந்த பெரும் விபத்தில் 9 தொழிலாளர்கள் பலியாகினர், மேலும் பத்து பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் எண்ணூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
எண்ணூரில் அனல்மின் நிலைய கட்டுமானப் பணியில் கட்டப்பட்டு வந்த ஓர் ஆர்ச் அமைப்பு சுமார் 30 அடி உயரத்திலிருந்து இடிந்து விழுந்தது. இதில், கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வட மாநில தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.இந்த விபத்தில் 9 பேர் பலியாகியுள்ள நிலையில் காயமடைந்த அனைவரும் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
 
இந்த விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று ஆவடி காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது. விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டு, மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
 
இந்த சம்பவத்தால் துயரமடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில்  சென்னையில் கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டதால் வருத்தம் அடைந்தேன். இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடனும், அவர்களது குடும்பங்களுடனும் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் PMNRF நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்,” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்