800 ஆண்டுகள் பழைமையான ’குதிரை குத்திப்பட்டான்’ நடுகல் பார்த்ததுண்டா?

Webdunia
திங்கள், 20 ஜூன் 2016 (11:22 IST)
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, கரடிப்பட்டியில் நங்காஞ்சி ஆற்றங்கரையில் தமிழகத்தில் மிக அரிதாகக் காணப்படும் குதிரை குத்திப்பட்டான் நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
 

 
இதைப்பற்றி ஆய்வு மையத்தின் இயக்குநர் பொறியாளர் சு.ரவிக்குமார் கூறுகையில், ”தமிழ்நாட்டில் தொன்று தொட்டு இருந்த நாற்படைகளில் ஒன்று குதிரைப்படை. சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த அரப்பா நாகரிகத்தின் அழிபாடுகளில் இந்தியாவில் குதிரை இருந்தது என்பதற்குரிய அரிதான அகச்சான்றுகள் அகப்பட்டுள்ளன.
 
தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் குதிரைகளைப் பயன்படுத்தி இருந்தனர் என்று கூற முடியும். தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் மக்கள் குதிரை வண்டிகளில் ஊர்ந்து வந்தனர்; தமிழர்கள் கண்ட நான்கு விதப் படைகளில் குதிரைப் படையும் ஒன்று என்று இன்றும் சான்று காட்ட முடியும்” என்றார்.
 
அரவக்குறிச்சி நங்காஞ்சி ஆற்றங்கரையில் நமக்குக் கிடைத்துள்ள குதிரை வீரன் நடுகல் எதிரிப்படையின் குதிரையைத் தாக்கி வீரமரணம் அடைந்த வீரனின் நினைவாக, வீரத்தின் அடையாளமாக எழுப்பிக்கப்பட்ட நடுகல் ஆகும். இந்நடுகல் 80 செ.மீ அகலமும், 135 செ.மீ உயரமும் உடையதாகும்.
 
இதில் வீரனின் தலை வலதுபுறம் சாய்ந்துள்ளது. வீரன் தலையில் மகுடமும், காதில் காதணிகளும், கழுத்தில் கண்டிகை, சரப்பளி அணிகலன்களும் கையில் வீரக்காப்பும், இடையில் நல்ல வேலைப்பாடுகளுடன் ஆடையும், குறுவாளும் வைத்துள்ளான். வீரன் தன் வலது கையில் உள்ள குறுவாள் மூலம் தன்னைத் தாக்கும் குதிரையைக் குத்தும் வண்ணமும், இடது கையால் தன்னைத் தாக்கும் குதிரையத் தடுக்கும் வண்ணமும் நடுகல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
குதிரையின் முன்னங்கால் இரண்டும் வீரனின் இடுப்புப் பகுதியை தாக்கும் வண்ணமும், பின்னங்கால் இரண்டும் நிலத்தில் ஊன்றிய வண்ணமும் உள்ளது. குதிரையின் மேற்பகுதியில் வீரன் அமர்ந்து செல்லும் இருக்கை அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலை அமைப்பை வைத்துப் பார்க்கும் போது இச்சிலை 800 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்