அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!

Senthil Velan

வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (15:35 IST)
அடுத்த இரண்டு ஆண்டுகளில், மேலும் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 1598 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். 
 
இந்த விழாவில் பேசிய முதல்வர், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எத்தனையோ முத்திரை பதிக்கக்கூடிய திட்டங்களை நாங்கள் தீட்டியிருக்கிறோம் என்றார்.
 
அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில், மகளிருக்கான விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், இல்லம் தேடிக் கல்வி மக்களைத் தேடி மருத்துவம், ஒலிம்பிக் தங்கப் பதக்கத் தேடல், நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதல்வரின் முகவரி, கள ஆய்வில் முதலமைச்சர் இப்படி நான் சொல்லிக் கொண்டே போகமுடியும் என்று அவர் தெரிவித்தார்.
 
இந்த வரிசையில் இந்த திராவிட மாடல் அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் தான் மக்களுடன் முதல்வர் என்கிற இந்த மகத்தான திட்டம் இன்றும் இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கு அரசு சேவைகளை வழங்குகிற நிகழ்ச்சியில் பங்கு பெறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவர் கூறினார்
 
“மக்களிடம் செல் - மக்களோடு வாழ் - மக்களுக்காக வாழ்” என்பதுதான் எங்களை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணாவும் – மறைந்த முதல்வர் கருணாநிதியும் காட்டிய பாதை என்பதை நாங்கள் மறந்துவிட மாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்
 
மாற்றுத்திறனாளிகள்நலத்துறை சார்பில், 10 கோடி ரூபாய் மதிப்பில் 3 ஆயிரத்து 659 நபர்களுக்கு 3 சக்கர வாகனம், கடன் உதவிகள், கருவிகள், அடையாள அட்டைகள் தரப்பட்டிருக்கிறது என்றும் கூட்டுறவுத்துறை மூலமாக, 6 கோடியே 66 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 766 நபர்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
 
திமுக ஆட்சிக்கு வந்தது முதலாகவே, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகமாக உருவாக்கிக் கொண்டு வருகிறோம் என தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக, பல்வேறு புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது என்றும் இதுவரை 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27 ஆயிரத்து 858 பணியிடங்களுக்குப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளில், மேலும் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றும் மு க ஸ்டாலின் கூறினார்.

ALSO READ: மேகதாது அணை விவகாரம்.! மாநில உரிமையை பாதுகாக்க வேண்டும்..! டிடிவி தினகரன்
 
இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அதன் ஒரு பகுதியாகதான், இன்றைக்கு 1,598 பணியிடங்களுக்குத் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது என்றும் பணி நியமனம் பெற்றுள்ளவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்