இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிகமான வரிகளை விதித்து வருவதால் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் ஆபத்து உள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவுடன் இந்தியா வர்த்தகம் செய்வதை கண்டித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்திய பொருட்களுக்கு முதலில் 25 சதவீதம் வரி விதித்த நிலையில் இன்று அதை மேலும் 25 சதவீதம் உயர்த்தி 50 சதவீதம் ஆக்கியுள்ளார். இதனால் திருப்பூரில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பின்னலாடைகள் விலை உயரும் என பின்னாலாடை நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.
இதுகுறித்து பேசிய திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் “இந்த வரி விதிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. மத்திய அரசு இந்த விவகாரத்தில் தீர்வு காண வேண்டும். இந்த வரி உயர்வு அமெரிக்க நுகர்வோர்களை பாதிக்கும். 100 ரூபாய் ஆடைகள் 150 ஆக உயரும். இந்தியாவுக்கான வரி உயர்வை வாய்ப்பாக கொண்டு வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் நமக்கு கிடைக்கும் அமெரிக்க ஆர்டர்களை கவர்ந்து கொள்வார்கள்.
இங்கிலாந்துடன் வரியில்லா ஒப்பந்தம் உள்ளதால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிக ஆர்டர்கள் திருப்பூருக்கு கிடைக்கும். இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K