ஐந்து மாதங்களில் ஐந்து போர்களை நிறுத்தியுள்ளேன்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பெருமை பேசும் நிலையில், சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். குறிப்பாக, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் மற்றும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆகியோருக்கு இடையிலான வார்த்தை போரை நிறுத்தியது டிரம்ப் தான் என்று நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முடிவில், மைக்கேல் வாகன், இந்திய அணியை வம்பிழுக்கும் விதமாக ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார். ஆனால், இந்தியா வெற்றி பெற்றவுடன், வாசிம் ஜாபர் பதிலுக்கு மைக்கேல் வாகனுக்கு பதிலடி கொடுத்து சீண்டினார்.
இந்த விவாதத்தை கண்ட நெட்டிசன்கள், "இந்த வார்த்தை போரை டிரம்ப் தான் நிறுத்தியிருப்பார்" என்று கிண்டல் செய்தனர். ஒரு கட்டத்தில், "வாசிம் ஜாபர், எனக்கும் வாகனுக்கும் இடையேயான சண்டையை நிறுத்த டிரம்ப் தான் உதவினார் என்று வெளியான செய்திகள் ஆதாரமற்றவை" என்று நகைச்சுவையாக பதிவிட்டார்.
உலகில் எங்கு போர் நடந்தாலும், அந்த போரை நிறுத்தியதாக தன்னை தானே தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் டிரம்ப்புக்கு, இந்தச் சம்பவத்தின் மூலம் சமூக வலைத்தளங்களில் சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.