2023ஆம் ஆண்டு தமிழத்திற்கு சோதனையா? சாதனையா? ஒரு விரிவான பார்வை..!

புதன், 27 டிசம்பர் 2023 (08:15 IST)
2023 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு ஒரு சோதனையான ஆண்டு என்று சொல்லலாம். ஆண்டு தொடக்கத்திலேயே பல்வேறு சிக்கல்கள் இருந்தது என்பதும் தமிழக அரசு சவால்களால் நிறைந்த  நிகழ்வுகளை சந்தித்தது என்பதன் குறிப்பிடத்தக்கது.
 
1. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல்

 

முதல் கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமுருகன் ஈவேரா என்பவர் திடீரென காலமானதை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுகவில் தென்னரசு போட்டியிட்டார்.  இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக செயல்பட்டது. இதனால்  சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்  ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.
 
2. செந்தில் பாலாஜி கைது: 

 

2023 ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சறுக்கல்களில் ஒன்று அமைச்சர் செந்தில் பாலாஜி கைது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் என்ற  சக்தி மிகுந்த அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி  ஜூன் 14 ஆம் தேதி அதிரடியாக அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.  அவரது கைதின் போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின்னர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனிடையே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மனு மேல் மனு போட்டு வாதாடியும் இன்று வரை ஜாமீன் கிடைக்கவில்லை என்பதும் தற்போது அவரது ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
3. என் மண் என் மக்கள் நடைப்பயணம்:

 

2023 ஆம் ஆண்டில் பாஜகவிற்கு ஒரு முக்கிய நிகழ்வு என்றால் அது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடை பயணம் தான்.  ஜூன்  மாதம் இந்த படம் நடைப்பயணத்தை அவர் தொடங்கிய போது உள்துறை அமைச்சர் அமித்ஷா பயணத்தை தொடங்கி வைத்தார்.  அண்ணாமலை உடன் பாதையாத்திரையில் சுமார் 5000 பேர் பங்கேற்றனர்  ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த நடைபயணம் கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது என்பதும் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த பயணம் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலையின் இந்த பயணம் தமிழக முழுவதும் பாஜகவுக்கு மிகப்பெரிய வாக்கு வங்கியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.  
 
4. மகளிர் உரிமைத்தொகை:  

 

2023 ஆம் ஆண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த ஒரு முக்கிய நிகழ்வு என்றால் அது மகளிர் உரிமை தொகை என்று கூறலாம்.  திமுக தேர்தல் வாக்குறுதியில் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று தெரிவித்த நிலையில் இரண்டரை ஆண்டுகள் கழித்து செப்டம்பர் 15ஆம் தேதி  பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் இந்த தொகை வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் போடப்பட்டது என்பதும், அதன் பின் ஒவ்வொரு மாதமும் வாங்கி கணக்கில் மகளிர்களுக்கு 1000 ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.  
 
5. தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா

 

2023 ஆம் ஆண்டு நிகழ்ந்த இன்னொரு நிகழ்வு என்றால் அது விஜயகாந்த் பொதுச்செயலாளராக இருந்த தேமுதிகவில் புதிய பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டது தான். சென்னையில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதாவை நியமனம் செய்வதாக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து தற்போது அவர்  தேமுதிக பொதுச் செயலாளர் உள்ளார் என்பதும் ஆனால் அதே நேரத்தில் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள் நடத்துவதற்கு விஜயகாந்த்துக்கு உரிமை வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
6. மிக்ஜாம் புயல் 

 

2023 ஆம் ஆண்டு நிகழ்ந்த பெரும் சோகமான நிகழ்வு என்றால் அது மிக்ஜாம் புயல் தான். டிசம்பர் 3ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டது. குறிப்பாக சென்னையில்  24 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ச்சியாக கன மழை பெய்தது. இதன் காரணமாக  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அடிப்படை தேவைகளான பால், உணவு கூட கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
 
7. தென்மாவட்ட வெள்ளம்:

 

மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு வருவதற்கு முன்னரே திடீரென தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வருடத்தில் பெய்யக்கூடிய மழை ஒரே நாளில் பெய்ததால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான கால்நடைகள் அடித்து செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இலட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்தது. விவசாயிகள், பொதுமக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து நின்றனர்.

8.  பொன்முடி சிறை தண்டனை:

 

தமிழக அரசுக்கு நெருக்கடியை தரக்கூடிய இன்னொரு நிகழ்வு இந்த ஆண்டில் நடந்தது என்றால் அது பொன்முடியின் சிறை தண்டனை தான். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடியை கீழமைக்கோர்ட் விடுதலை செய்தாலும் உயர்நீதிமன்றத்தில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இருப்பினும் இந்த சிறை தண்டனை 30 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த 30 நாட்களுக்குள் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேல்முறையீட்டில் தண்டனை நிறுத்தி வைக்கப்படவில்லை என்றாலோ அல்லது  ஜாமீன் கிடைக்கவில்லை என்றாலோ பொன்முடி 31 வது நாள் சிறைக்கு செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  
 
9. அமலாக்கத்துறை அதிகாரி தமிழகத்தில் கைது:
 
தமிழகத்தில் நிகழ்ந்த இன்னொரு துரதிர்ஷ்டமான சம்பவம் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டது தான். மதுரையைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரை தமிழக லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி லஞ்சம் வாங்கியதை கையும் களவுமாக பிடித்ததாகவும் கூறப்பட்டது.
 
10. சனாதன ஒழிப்பு மாநாடு:

 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். டெங்கு, கொரோனா போல் சனாதனம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும்  இந்த கூட்டத்தில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டதை அடுத்து இருவர் மீதும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
2023ஆம்  ஆண்டை பொறுத்த வரை தமிழகத்திற்கு  சாதகமான அம்சங்கள் ஒரு சில இருந்தாலும் பல பாதகமான அம்சங்கள் தான் இருந்துள்ளது. எனவே தமிழகத்திற்கு 2024ஆம் ஆண்டாவது ஒரு நல்ல ஆண்டாக இருக்க கடவுளை வேண்டிக் கொள்வோம்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்