கோவை மாவட்டம், பூண்டியில் உள்ள வெள்ளிங்கிரி மலை ஏறிய ஒரு 15 வயது சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
பிப்ரவரி 1-ம் தேதி முதல், வெள்ளிங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மலையேறும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் உயிரை பாதுகாக்க, மலை அடிவாரம் மற்றும் முதல் மலைப்பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இதயம், சர்க்கரை நோய் போன்ற உடல் பிரச்னைகள் உள்ள பக்தர்கள், மலையேறுவதற்கு முன் அவர்களது உடல் நிலையை பரிசோதனை செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், விஸ்வா என்ற 15 வயது சிறுவன் வெள்ளிங்கிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்து, இறங்கும்போது மயக்கமடைந்தார். உடனடியாக, அவரை டோலியில் மலை அடிவாரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.