மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிபிஎஸ் என்ற நோய் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவிலும் இந்த நோய் பரவியுள்ளது. குறிப்பாக, பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு பலியான சம்பவம், கேரளா சுகாதாரத்துறைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி கவுதமி பிரவீன் கடந்த சில நாட்களுக்கு முன் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் சிகிச்சைப் பலன் இன்றி உயிரிழந்தார். கடந்த திங்கள்கிழமை, எர்ணாகுளத்தைச் சேர்ந்த 58 வயது நபர் ஒருவரும் இதே நோயால் பலியாகியுள்ளார்.
ஜிபிஎஸ் என்பது நரம்பு மண்டலத்தை தாக்கக்கூடியது என்பதும், இதற்கு முறையாக சிகிச்சை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நோயால் இணை நோய்கள் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் பலியாகி வருகின்றனர். ஏற்கனவே புனேவில் மிக அதிகமாக இந்த நோய் பரவி வரும் நிலையில், தற்போது கேரளத்திலும் பரவுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.