முதல் நாள் அமைத்த கலசத்திற்கே அடுத்தடுத்த நாட்களில் புதுமலர் சாத்தி, நிவேதனமும் செய்ய வேண்டும். ஒன்பது நாட்களும் அம்பிகை பாடல்களைப் பாடுவதும், கேட்பதும் தொடர வேண்டும்.
முதல் மூன்று நாட்களில் துர்க்கையையும், அடுத்த மூன்று தினங்களில் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதியையும் வணங்குவது வழக்கம். நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள், சரஸ்வதிக்கு உரிய மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும் நாளில் சரஸ்வதி தேவி தோன்றுகிறாள் என்பது ஐதீகம்.
எதற்குமே ஒரு மூலம் உண்டு என்பதை உணர்த்தும் விதமாகவே கலைமகள் மூல நட்சத்திரத்தில் அவதரித்தாள் என்பர். ஞானம், கல்வி, இவை மட்டுமின்றி, ஆயுள், ஆரோக்யமும் கூட சரஸ்வதியின் கடாட்சத்தால் கிட்டும் என்கிறது பவிஷ்யோத்ர புராணம்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் பூஜை, விரதம் இவற்றை அனுஷ்டிக்க வேண்டும் என்றும், இயலாதவர்கள் அஷ்டமி திதி வரும் நாளில் மட்டுமாவது அவசியம் விரதம் இருக்க வேண்டும் எனவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.
விஜயதசமி தினத்தில், அம்பிகை வெற்றி வாகை சூடினாள். ஆணவம், சக்தியாலும்; வறுமை, செல்வத்தினாலும்; அறியாமை, ஞானத்தாலும் வெற்றி கொள்ளப்பட்ட தினம் அது. ஆகவே அன்றைய தினம் மிகவும் சிறப்புமிக்கது. அன்று புதிதாகத் தொடங்கும் எந்தக் கலையும் எளிதாக வசமாகும் என்பது நம்பிக்கை. நவராத்திரி பண்டிகையின் நிறைவு நாளும் இதுவே.