9 நாட்கள் நவராத்திரியின்போது அனுஷ்டிக்க வேண்டிய பூஜை முறைகள்...!

Webdunia
நவராத்திரியின் சிறப்பு புரட்டாசி மாதம் அமாவாசையை அடுத்த பிரதமை துவங்கி 9 நாள்கள் நவராத்திரி அனுஷ்டிக்க வேண்டும். 

 
மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என பலவகை ரூபங்கள் எடுத்தாலும் அடிப்படை ஆதார  சக்தி ஒன்றே. இந்த தெய்வங்கள் அனைத்தையும் நம் வீட்டிற்கே வரவழைத்து போற்றி வணங்கி வழிபடும் விழாவே நவராத்திரி.
 
முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியாகவும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் நம்மை காத்து ரட்சிக்கிறாள்  தேவி.
 
முதல் நாளில் அன்னை மகேஸ்வரியாக காட்சி கொடுக்கிறாள். இன்றைய தினம் அவளை மல்லிகை, வில்வம் கொண்டு அலங்கரிக்கவேண்டும். வெண்  பொங்கல் நைவேத்தியம் செய்து, தோடி ராகப்பாடல்களை பாடலாம்.
 
இரண்டாம் நாளன்று கௌமாரி ரூபத்தில் இருப்பவளுக்கு முல்லை, துளசியால் அலங்காரம் செய்து, புளியோதரை நிவேதனம் செய்யலாம்.
 
மூன்றாம் நாள் வராகி ஆகிறாள் அன்னை. செண்பகம் மற்றும் சம்பங்கிகள் இவளுக்கு உகந்தவை. சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடலாம்.
 
நான்காம் நாள் மகாலட்சுமியாக காட்சியளிக்கிறாள் தேவி. மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து, அன்னம் நைவேத்தியம் பண்ண வேண்டும்.
 
ஐந்தாம் நாளில் வைஷ்ணவி ஆகிறாள் அம்பிகை. முல்லைப்பூ அலங்காரமும் தயிர் சாதம் படத்து வணங்கலாம்.
 
ஆறாம் நாள் இந்திராணியாக காட்சியளிக்கும் தேவிக்கு ஜாதி மலரை வைத்து பூஜை செய்யலாம்.
 
ஏழாம் நாளில் சரஸ்வதியாக அருள் தரும் அன்னைக்கு தாழம்பூ சூடி, தும்பை இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம்  செய்யலாம்.
 
எட்டாம் நாளில் நரசிம்ஹி ரூபத்தில் காட்சி தருகிறாள் அம்பிகை. இவளுக்கு உகந்த ரோஜா மலரை சூடி வழிபாடு செய்யலாம்.
 
ஒன்பதாம் நாள் சாமுண்டியாக தோற்றம் கொள்கிறாள் அன்னை. இன்றைய தினம் பால் பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம். தாமரை மலர்களால் அலங்கரித்து பூஜை செய்யலாம். இத்துடன் நித்தம் ஒரு சுண்டலால் நிவேதனம் செய்து நவக்கிரகங்களை சாந்தப்படுத்தி, அவற்றின் நன்மைகளை பெறலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்