நவராத்திரியை பல்வேறு பெயர்களில் மாநிலங்களில் வழிபடும் முறை

புரட்டாசி வளர்பிறை பிரதமை தொடங்கி, நவமி வரையுள்ள ஒன்பது நாள் மேற்கொள்வது நவராத்திரி விரதம். சரஸ்வதி,  லட்சுமி, பார்வதி என அம்பிகையை முப்பெரும் தேவியராக வழிபட்டு கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் பெறுவது இதன் நோக்கம்.

 
நவராத்திரி விரதம் இருப்பவர்கள் வீட்டில் கொலுமேடை அமைத்து, மும்பத்தில் ஆதிபராசக்தியை ஆவாகனம் செய்து  வழிபடுவர். ஒன்பது நால் வழிபட இயலாதவர்கள் ‘சரஸ்வதி பூஜை’ அன்று வழிபடுவர். இவ்வருடம் நாளை வியாழன் (செப். 21) நவராத்திரி விரதம் தொடங்குகிறது.
 
நமது பாரத தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தீமையை நன்மை அழித்து எல்லாரும் சுகமாக விளங்குவதை குறிக்கும்  வகையில் நவராத்திரி கொண்டாடப்படுகின்றது. ஒன்பது நாட்கள் அம்மன் தவம் இருந்து பத்தாம் நாள் விஜதசமியன்று  தீமையாம் மகிஷனை வதம் செய்ததை கொண்டாடுகிறோம். 
 
அண்டை மாநிலமான கர்நாடகத்தில் தசரா என்று சிறப்பாக கொண்டாடுகின்றனர், இங்கு சாமுண்டீஸ்வரி இந்த பத்து  நாட்களிலும் போற்றி வணங்கப்படுகின்றாள். கேரளாவில் விஜயதசமியன்று அக்ஷராப்பியாசம் என்று குழந்தைகளுக்கு முதன்  முதலில் கல்வியை துவக்குகின்றனர். குஜராத்தில் ஒன்பது நாட்களும் இரவு கர்பா என்னும் நடனமாடி அன்னையை  வழிபடுகின்றனர். 
 
வட நாட்டில் ஒரு சாரார் கடுமையான விரதம் இருந்து அன்னையை நவ துர்காவாக வழிபடுகின்றனர். ஒரு சாரார் இதை ராம்லீலாவாக, இராமர், இராவணன வெற்றி கொண்டதை கொண்டாடுகின்றனர். ஒன்பது நாட்கள் இராமாயணம் பாராயணம் செய்கின்றனர் பத்தாம் நாள் விஜய தசமியன்று, இராவணன், மேகநாதன்(இந்திரஜித்), கும்பகர்ணன் பொம்மைகளை  கொளுத்துகின்றனர். 
 
வங்காளம் முதலான கிழக்குப் பகுதியில் துர்க்கா பூஜை மிகவும் சிறப்பு. சஷ்டியன்று அன்னை துர்க்கை திருக்கயிலாயம்  விடுத்து பூலோகத்திற்கு தன் அன்னை இல்லத்திற்கு தன் மகள்கள் மஹா லக்ஷ்மி மற்றும் மஹா சரஸ்வதி, மகன்கள் கணேசன்  மற்றும் கார்த்திகேயன்(முருகர்) மற்றும் கணேசரின் மனைவி அபராஜிதாவுடன் எழுந்தருளி அருள் பாலித்து பூஜையை ஏற்றுக்கொள்கின்றாள். விஜயதசமியன்று பின்னர் அன்னை திருக்கயிலாயம் திரும்பிச்செல்கின்றாள் என்பது ஐதீகம். 
 
நவராத்திரியின் போது தேவி மகாத்மியம் என்றும் துர்கா சப்தஸதீ என்றழைக்கப்படும் ஸ்தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம்,  லிதா த்ரிசதீ, அபிராமி அந்தாதி மற்றும் அன்னையின் பல்வேறு தோத்திரங்களை படிப்பது நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்