பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் தேவைப்படும் இரும்புச்சத்து...

கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அதில் கர்ப்பிணிகளுக்கு அவசியமான சத்துக்களில் முதன்மையானது  இரும்புச்சத்து. 
கர்ப்பம் உறுதியானதும் மருத்துவர்கள் இரத்தப் பரிசோதனை செய்து ஹீமோகுளோபின் அளவை சரிபார்த்து அதற்கேற்ப இரும்புச்சத்து மாத்திரைகளைப்  பரிந்துரைக்கிறார்கள். இதன் மூலம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கும், அதைச் சுமக்கும் தாய்க்கும் இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படுகிற எந்த பாதிப்பும்  வந்துவிடாமல் தடுக்கப்படும்.
 
மனித உடலில் ஒவ்வொரு செல்லிலும் இரும்புச்சத்து இருக்கும். இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகக் காரணமான ஹீமோகுளோபினின் மிக முக்கிய  உட்பொருள் இது. இரத்த சிவப்பு அணுக்கள்தான் உடலின் திசுக்களுக்கு ஆக்சிஜனைக் கொண்டு செல்பவை. வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்வதன் மூலம்  உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கும், தொற்றுகள் ஏற்படுவதிலிருந்து உடலைக் காக்கவும் இரத்த சிவப்பு அணுக்கள் அவசியம்.
 
கர்ப்பமடைகிறபோது பெண்ணின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தானாகக் குறையும். குழந்தையின் வளர்ச்சிக்கான வேலைகளை உடல் பார்ப்பதே இதற்குக் காரணம். அந்த நேரத்தில் கர்ப்பிணியின் உடலில் போதுமான அளவு வெள்ளை அணுக்கள் இருக்க வேண்டியது அவசியம். இரும்புச்சத்துக் குறைபாடு என்பது  அலட்சியமாக விடப்பட்டால் அது தாய் மற்றும் கருவிலுள்ள குழந்தையின் உயிர்களையே பறிக்கும் அபாயம் உள்ளது.
 
கர்ப்பத்தின்போது பெண்ணின் உடலுக்கு வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிக இரும்புச்சத்து தேவைப்படுகிறது. அது உணவு மற்றும் மாத்திரைகளின் மூலம்  ஈடுகட்டப்படாதபோது இரத்தசோகை வருகிறது. வைட்டமின் பி மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடும் இன்னொரு காரணம். இந்த இரண்டு குறைபாடுகளுமே  இரத்த சோகையைத் தீவிரப்படுத்துபவை.
 
பெண்களிடம் இரத்தசோகை பிரச்சனை இருப்பது மிகப் பரவலான ஒன்று என்கின்றன ஆய்வுகள். மாதவிலக்கின்போது வெளியேறும் இரத்தப் போக்கு இதற்கு முக்கியமான காரணம். மாதவிடாயின் 3 முதல் 4 நாட்களில் பெண்கள் ஒவ்வொரு முறையும் 10 முதல் 35 மி.லி. இரத்தத்தை இழக்கிறார்கள். 
 
இரத்தத்தில் வெளியேறும் இரும்புச்சத்தை ஈடுகட்ட அவர்கள் போதுமான அளவு இரும்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதில்லை. அதன் விளைவாக அவர்களுக்கு இரத்த சோகை வருகிறது. கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் ஊட்டும் காலத்திலும் இரத்த சோகை பிரச்சனை இன்னும் அதிகரிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்