பேராசிரியர் எம். விஸ்வநாதன் நூற்றாண்டு விருது மற்றும் சொற்பொழிவு விழா

திங்கள், 13 அக்டோபர் 2025 (11:26 IST)

எம்.வி. நீரிழிவு மருத்துவமனை சார்பில் முதன்முறையாக பேராசிரியர் எம். விஸ்வநாதன் நூற்றாண்டு விருது மற்றும் சொற்பொழிவு விழா

 

நீரிழிவு மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித் துறையின் முன்னோடியான மறைந்த பேராசிரியர் எம். விஸ்வநாதன் அவர்கள், நாட்டிலேயே முதன்முறையாக நீரிழிவு நோய்க்கென ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவப் பிரிவையும், (Diabetes Clinic), எம்.வி. நீரிழிவு மருத்துவமனையையும் (M.V. Hospital for Diabetes)  நிறுவிய பெருமைக்கு உரியவர்.

 

இந்தியாவில் 3,00,000}க்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் டைப் 1 நீரிழிவு பாதிப்புடன் உள்ள சூழலில், அவர்களுக்கான மேம்பட்ட சிகிச்சை மற்றும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது தற்போதைய அத்தியாவசியத் தேவையாக உள்ளது

 

சென்னை, அக்டோபர் 11, 2025: நாட்டின்  முன்னணி நீரிழிவு மருத்துவமனைகளில் ஒன்றான எம்.வி. நீரிழிவு மருத்துவமனை மற்றும் நீரிழிவு நோய் ஆராய்ச்சிக்காகச் செயல்படும் லாப நோக்கற்ற அமைப்பான பேராசிரியர் எம். விஸ்வநாதன் நீரிழிவு ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து, இந்திய நீரிழிவு மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் மறைந்த பேராசிரியர் எம். விஸ்வநாதனின் நூற்றாண்டு விருது மற்றும் சொற்பொழிவு விழாவை சென்னையில் சனிக்கிழமை நடத்தின.

 

சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் தென்கிழக்கு ஆசியத் தலைவர் டாக்டர் பன்ஷி சபூ அவர்கள், இந்நிகழ்வில் பங்கேற்று முக்கியக் கருத்துகளை முன்வைத்தார். இதில் தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் டாக்டர் ஏ. சோமசுந்தரம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், பேராசிரியர் எம். விஸ்வநாதன் நீரிழிவு ஆராய்ச்சி மையத்தின் முதல்வர் டாக்டர் எஸ்.என். நரசிங்கன், இணை முதல்வர் டாக்டர் ஜெயஸ்ரீ கோபால், இந்திய நீரிழிவு ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் டாக்டர் விஜய் விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பாக்கினர்.

 

விழாவில் உரையாற்றிய டாக்டர் பன்ஷி சபூ, “உலக அளவில் டைப் 1 நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு மட்டும் ஏறத்தாழ 9,41,000 பேருக்கு அத்தகைய பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது உலகிலேயே உச்ச எண்ணிக்கையாக இந்தியாவில்தான் 20 வயதுக்குட்பட்ட இளம்பருவத்தினர் மற்றும் குழந்தைகள் 3,01,000 பேர் இந்த நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

டைப் 1 நீரிழிவு நோய்க்கு ஆயுள் முழுக்க மருத்துவக் கண்காணிப்பு அவசியம். அவ்வாறு இல்லாவிட்டால், இது ஆரோக்கியமான வாழ்க்கையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். நல்வாய்ப்பாக, தற்போது உள்ள மேம்பட்ட மருத்துவ உபகரணங்கள் வாயிலாக அதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலும். மிக மெல்லிய இன்சுலின் ஊசிகள், தொடர்ச்சியான ரத்த சர்க்கரை அளவு (குளுக்கோஸ்) கண்காணிப்பு (CGM)  சாதனங்கள், இன்சுலின் பம்புகள் போன்றவை நீரிழிவு சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் அசாத்தியமான முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுபோன்ற தொடர்ச்சியான விழிப்புணர்வு, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க நுட்பங்கள் மூலம், டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும், இளம் வயதினரும் மற்றவர்களைப் போலவே இயல்பாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்வதை உறுதிசெய்யலாம்,” என்று கூறினார்.

 

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டாக்டர் ஏ. சோமசுந்தரம் அவர்கள் பேசும்போது, “இந்தியாவில் நவீன நீரிழிவு மருத்துவத்துக்கு வலுவான அடித்தளத்தையும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற மக்களுக்கு மறுவாழ்வையும் வழங்கி மகத்தான பங்களிப்பைச் செய்து மறைந்த பேராசிரியர் எம். விஸ்வநாதனை நினைவுகூர்ந்து போற்ற வேண்டியது நமது கடமை .

 

அவரது வழியில், தரமான மருத்துவ சேவைகளுக்காக காத்திருக்கும் எண்ணற்ற மக்களுக்கான பல்வேறு திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.  மாநிலம் முழுவதும் உள்ள எளிய மக்களுக்கு இந்த சேவைகள் சென்றடைவதே அத்திட்டங்களின் நோக்கம்.

 

நீரிழிவு போன்ற வாழ்க்கை முறை நோய்களை உரிய நேரத்தில் கண்டறிதல், சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பு வழங்குதலை அரசு திட்டங்கள் உறுதி செய்கின்றன. பொது சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலமும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலமும், மருத்துவ வசதிகள் கிடைப்பதில் உள்ள இடைவெளியைக் குறைத்து, அனைத்து தரப்பு மக்களின்  ஆரோக்கியத்தையும் மேம்படுத்த அரசு முயல்கிறது,” என்று தெரிவித்தார்.

 

டாக்டர் விஜய் விஸ்வநாதன் தனது உரையில், “மறைந்த பேராசிரியர் எம். விஸ்வநாதனின் அளப்பரிய சமூக பங்களிப்புகளைப் போற்றுவதற்கும், நீரிழிவு நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக அவர் காட்டிய பாதையைத் தொடர்வதற்கும் இந்த நூற்றாண்டு விழா ஆக்கப்பூர்வமான  வழியை ஏற்படுத்தியுள்ளது.

 

டைப் 1 நீரிழிவு சிகிச்சையில் உள்ள சவால்கள் மற்றும் சிகிச்சை மேம்பாடுகளை எடுத்துரைத்த டாக்டர் பன்ஷி சபூவுக்கு நன்றி.  ராயபுரம், தென் சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள எம்.வி. நீரிழிவு மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் டைப் 1 நீரிழிவு நோய்க்கு சிறப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பு, ஆலோசனை மற்றும் சமீபத்திய நீரிழிவு மேலாண்மைத் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சிகிச்சைகளை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.  இதன் மூலம் அந்த இளம் நோயாளிகள் ஆரோக்கியமான மற்றும் ஆக்கப்பூர்வமான வாழ்க்கையை வாழ முடியும்,” என்று கூறினார்.

 

முன்னதாக, விழாவில் பேராசிரியர் எம். விஸ்வநாதன் நீரிழிவு ஆராய்ச்சி மையத்தின் முதல்வர் டாக்டர் எஸ்.என். நரசிங்கன் அவர்கள், சிறப்பு விருந்தினர் டாக்டர் ஏ. சோமசுந்தரம் அவர்களைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார்.  மையத்தின் இணை முதல்வர் டாக்டர் ஜெயஸ்ரீ கோபால் அவர்கள் டாக்டர் பன்ஷி சபூ அவர்களை அறிமுகப்படுத்தினார். அரசு அதிகாரிகள், மருத்துவத் துறை அலுவலர்கள், எம்.வி. நீரிழிவு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஊழியர்கள், பல்வேறு துறைகளில் இருந்து அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

காலத்தால் அழியாத பெருமைகளுக்கும், பாரம்பரியத்துக்கும் உரிய பேராசிரியர் எம். விஸ்வநாதன், இந்திய நீரிழிவு மருத்துவத்தின் தந்தை என்று பரவலாகக் கருதப்படுபவர்.  நாட்டின் நீரிழிவு சிகிச்சையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்த தொலைநோக்கு மருத்துவர். அவர் 1948- இல் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்தியாவின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட நீரிழிவு சிகிச்சைப் பிரிவை நிறுவினார். பின்னர் 1954 இல் சென்னையில் எம்.வி. நீரிழிவு மருத்துவமனையை தொடங்கினார். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) மற்றும் உலக சுகாதார அமைப்பால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட முன்னோடி நிறுவனமான பேராசிரியர் எம். விஸ்வநாதன் நீரிழிவு ஆராய்ச்சி மையத்தை 1972 இல் ஆரம்பித்தார். பேராசிரியர் எம்.விஸ்வநாதனின் ஆராய்ச்சி, கல்விசார்ந்த முன்னெடுப்புகள் மற்றும் நோயாளிகள் நலனில் காட்டிய அர்ப்பணிப்பு ஆகியவை இந்தியாவில் நவீன நீரிழிவு சிகிச்சைக்கான அடித்தளத்தை அமைத்ததுடன், பல தலைமுறைகளாக மருத்துவத் துறையினருக்கு உத்வேகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்