வயிற்றில் வாயு என்பது இரைப்பையில் வாயு சேறும் ஒரு நிலை ஆகும். இது ப்லேடஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் ஏப்பம், வயிறு வீக்கம், வாயு வெளியெற்றம் மற்றும் அடிவயிற்றில் வலி போன்றவை ஏற்படுகின்றன.
பாலில் உள்ள ‘லாக்டோஸ்’ சிலருக்கு வாயுப் பிரச்சனையை உருவாக்கலாம். பழங்களில் உள்ள ‘ஃப்ரக்டோஸ்’ மற்றும் செயற்கை சுவையூட்டிகளில் உள்ள ‘சார்பிடால்’ போன்றவற்றைச் செரிக்க முடியாத போதும் வாயுப் பெருக்கம் உண்டாகும். சார்பிடால் என்பது, இனிப்புச் சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது.
எண்ணெய்யில் பொறித்த இறைச்சி, கொழுப்பு நிறைந்த உணவுகள், செரிமானத்தைத் தாமதமாக்கி, வாயுப் பெருக்கத்திற்கு வழிவகுக்கும். நார்ச்சத்து மிகுந்த உணவுகள், உடலுக்கு அதிக நன்மை செய்வதாயிருப்பினும் சிலருக்கு வாயுவை உருவாக்கலாம்.
பெருங்குடல் சார்ந்த நோய்கள், குளுடன் புரதத்தைச் செரிக்க முடியாமல் போவது, செரிமான தசைகளில் பாதிப்பு, கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், வயிற்றுப் புண் போன்றவற்றின் காரணமாக, அந்தந்த நோய்க் குறிகுணங்களுடன், ஒரு நாளில் பல முறை வாயு வெளியேறும்.
குடலில் சேரும் வாயுக்களில் கரியமில வாயு, ஹைட்ரஜன், நைட்ரஜன், மீதேன், ஆக்சிஜன் போன்றவை அடக்கம். சில நேரங்களில் கந்தகம் சேர்ந்த கூட்டுப்பொருள்கள் உருவாவதால், நாற்றம் உண்டாகிறது.