மூக்கிரட்டைக் கீரையைச் சமையலுடன் சேர்த்து வாரம் இரண்டு முறை உண்டு வந்தால் வாய்வு சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இவ்வாறு உண்பதால் இரத்த சோகை, காமாலை போன்ற நோய்கள் உடலை அணுகாது. மேலும் சுவாச பாதிப்புகள் சரியாகும்.
இக்கீரையும் நெய்யிட்டு வதக்கி ஒரு மண்டலம் உண்டு வர கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். இக்கிரையால் மலச்சிக்கல் நீங்கும். மேலும் இரத்த விருத்தி செய்து உடலுக்கு ஆண்மையையும், அழகையும் ஊட்டவல்லது.
மூக்கிரட்டை, சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மிளகு, சீரகம், திப்பிலி இவற்றை சமமாக எடுத்துக் கொண்டு, தூளாக்கி, தினமும் இரு வேளை தேனில் கலந்து உண்டு வர, உடல் எடை குறைந்து, உடல் வனப்பு மிகுந்து காணப்படும்.
மூக்கிரட்டை சமூலம் எனும் முழுச் செடியையும் உலர்த்தி, தூளாக்கி, தினமும் இரு வேளை, சாப்பிட்டு வர, மலச்சிக்கல் நீங்கி உடல் புத்துணர்வாகி, இளமைப்பொலிவுடன் காணப்படும்.
மூக்கிரட்டை வேர்கள் சற்று நீளமாக, சிறிய மரவள்ளிக் கிழங்கு போல காணப்படும். இரத்தச் சோகை, இதய பாதிப்புகள் போன்ற வியாதிகளுக்கு, சிறந்த மருந்தாகிறது. மூக்கிரட்டை வேரை நீரில் இட்டு ஆற வைத்து பருகி வர, இரத்த சோகை, சளித் தொல்லை நீங்கும்.