ராஜஸ்தான் மாநிலத்தில் 21 வயதான திருமணமான பெண் ஒருவர் எம்எல்ஏ உட்பட கிட்டத்தட்ட 12 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதத்தில் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னாள் பாஜக எம்பி-ஆக இருந்த கிரோடி லால் மீனா ராஜஸ்தானில் தேசிய மக்கள் கட்சி எம்எல்ஏவாக இருக்கிறார். இவர் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளார். இதில் சிபிஐ விசாரணை தேவை என கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மகளிர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் கணவர் மற்றும் கணவரின் சகோதர்களுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அந்த பெண்ணின் கணவர் அவரை பலாத்காரம் செய்தவர்களிடம் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாகவும், அவர்கள் கடந்த மூன்று மாதமாக தோல்பூர், காயம்புத்தூர் மற்றும் ஜெய்பூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அதில் ஒரு நாள் இரவு எம்எல்ஏ கிரோடி லால் மீனாவால் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தொடர்பாக பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள எம்எல்ஏ மீனா தனக்கு எந்த பெண்ணை யாரென்றே தெரியாது என மறுத்துள்ளார். நான் அந்த பெண்ணை இதுவரை சந்தித்ததே இல்லை. என்னுடைய 40 வருட அரசியல் வாழ்க்கையில் முதன் முறையாக இந்த குற்றச்சாட்டை சந்திக்கிறேன். என்னுடைய அரசியல் புகழுக்கு களங்கம் விளைவிக்க இப்படி ஒரு பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் மருத்துவ பரிசோதனை முடிவுற்ற நிலையில் அறிக்கைக்காக காத்திருப்பதாக கூறிய வட்டார அதிகாரி சௌத்ரி அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடரும் என்றார்.