பிரபலமான ஃப்ரீ ஃபயர் விளையாட்டு மூலம் பழக்கமான காதலனை தேடி சிறுமி ஒருவர் மாநிலம் விட்டு மாநிலம் சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இளைஞர்கள், சிறுவர்கள் பல்வேறு சமூக வலைதளங்களையும் பயன்படுத்தி வரும் நிலையில் பலர் சமூக வலைதளங்கள் மூலமாகவே பழக்கமாகி காதலில் விழுவது சகஜமான ஒன்றாக மாறி வருகிறது. ஆனால் ஆன்லைனில் விளையாடும் கேம் ஒன்றின் மூலமாக மலர்ந்த ஒரு காதல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சிறுவர்கள், இளைஞர்கள் இடையே பிரபலமாக உள்ள மொபைல் கேம் ஃப்ரீ ஃபயர். மேற்கு வங்கத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் ஃப்ரீ ஃபயர் விளையாடி வந்தபோது அதில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிறுவன் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலான நிலையில், தான் காதலிக்கும் சிறுவனை காண சிறுமி முடிவு செய்துள்ளார்.
இதற்காக வீட்டிற்கு தெரியாமல் மேற்கு வங்கத்தில் இருந்து ஜார்கண்ட் வரை சென்றுள்ளார் அந்த சிறுமி. சிறுமி காணாமல் போனது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுமியின் மொபைலை ட்ராக் செய்த போலீஸார் இறுதியாக சிறுமியை கண்டுபிடித்துள்ளனர்.
இருவருமே சிறுவர், சிறுமியர் என்பதால் போலீஸார் அவர்களுக்கு அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.