நாடு முழுவதும் வக்ஃபு வாரிய சொத்துக்களை ஒழுங்குபடுத்தும் வக்ஃபு சட்ட திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், கூட்டுக் குழு 65 பக்க அறிக்கையை தயாரித்து சமர்ப்பித்த நிலையில், இன்று இந்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது. இந்த மசோதா குறித்து 8 மணி நேரம் விவாதம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மக்களவையில் தற்போது 542 உறுப்பினர்கள் இருப்பதால், தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் அதற்கு ஆதரவளிக்கும் கட்சிகள் இணைந்தால், இந்த மசோதா நிச்சயமாக நிறைவேறும் என்று கூறப்படுகிறது. மக்களவையில் நிறைவேறினால், மாநிலங்களவையிலும் இதே மசோதா நிச்சயமாக நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய கத்தோலிக்க பிஷப்புகள் அமைப்பு ஆதரவளித்துள்ளதால், கிறிஸ்துவ எம்பிகளும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.