வயநாடு தொகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் மற்றும் 2024 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலை ஒப்பிடும்போது, இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. பிரியங்காவை பார்க்க வந்த கூட்டம், ஓட்டு போட வரவில்லையா என்ற கேள்வி இதன் மூலம் எழுந்து வருவதாய் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மே மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர், அவர் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தல் ஏற்படுத்தப்பட்டது. இந்த இடைத்தேர்தலில், பிரியங்கா காந்தி நிச்சயம் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கருத்துக் கணிப்புகளும் அதையே சுட்டிக்காட்டின.
ஆனால், நேற்றைய வாக்குப்பதிவின்போது, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்கு சதவீதம் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. 14 லட்சத்திற்கு மேல் அதிகமான வாக்காளர்கள் இருக்கும் இத்தொகுதியில், 64% மட்டுமே வாக்குப்பதிவு நடந்தது. இதே தொகுதியில் 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தல்களில் முறையே 80% மற்றும் 73% வாக்கு பதிவாகி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்த போது, பொதுமக்கள் மத்தியில் உற்சாகம் காணப்பட்டது. ஆனால், அந்த உற்சாகம் வாக்களிப்பதில் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.