
உக்ரைனில் உள்ள கைவிடப்பட்ட செர்னோபில் அணு உலை அருகே சுற்றித் திரியும் நாய்கள் நீல நிறமாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1986ம் ஆண்டு ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையத்தில் அணு உலை வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் வெளிப்பட்ட அணுக்கதிர்கள் காற்றில் பரவி பலர் பலியானார்கள். இந்த அணுக்கதிர் வீச்சின் தாக்கம் உக்ரைன், பெலாரஸ் தொடங்கி ஐரோப்பா வரை பாதிக்கப்பட்டது.
இந்த விபத்திற்கு பின் செர்னோபில் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக அறிவிக்கப்பட்டது. அங்கிருந்து மக்கள் வெளியேறியபோது அவர்களது உடைகள், உடைமைகள் என அனைத்தையுமே விட்டுச் சென்றனர். அவ்வாறு அவர்கள் விட்டுச் சென்ற நாய்கள் அங்கேயே வாழ்ந்து வந்த நிலையில் அவற்றின் தலைமுறைகள் இன்றும் செர்னோபில் பகுதியில் சுற்றி வருகின்றன.
அவற்றிற்கு உணவிடுவதற்காகவே டாக்ஸ் ஆஃப் செர்னோபில் என்ற தன்னார்வல அமைப்பு செயல்பட்டு வருகிறது. அவ்வாறாக சமீபத்தில் நாய்களுக்கு உணவிட சென்றபோது அவற்றில் சில நீல நிறமாக மாறியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் நாய்களின் முடி மாதிரிகளை சேகரித்த அவ்வமைப்பினர் அது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அணுக்கதிர் வீச்சு மிகுந்த பகுதியில் பல தலைமுறைகளாக இந்த நாய்கள் வசித்து வருவதால் அதன் தாக்கம் நாய்கள் மீது ஏற்பட்டு நிற மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Edit by Prasanth.K