டெல்லியில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர், தனது தந்தையின் தூண்டுதலின் பேரில், உறவினர்களை பழிவாங்குவதற்காக பொய்யான ஆசிட் வீச்சு புகார் அளித்தது காவல்துறையின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மாணவி வகுப்பிற்கு சென்றபோது மூன்று உறவினர்கள் ஆசிட் வீசியதாக குற்றம் சாட்டினார். விசாரணையில், மாணவி கழிவறை சுத்திகரிப்பு திரவத்தைப் பயன்படுத்தி தானே காயத்தை ஏற்படுத்தி கொண்டது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகள் மற்றும் அழைப்பு பதிவுகள் மாணவியின் கூற்றை பொய் என நிரூபித்தன.
இதுகுறித்து நடந்த விசாரணையில் மாணவியின் தந்தை மீது, இரண்டு நாட்களுக்கு முன்னர், மாணவி குற்றம் சாட்டிய நபரின் மனைவி பாலியல் பலாத்காரம் மற்றும் மிரட்டல் புகார் அளித்திருந்தார். இந்த பலாத்கார வழக்கிலிருந்து தப்பிக்கவும், பழிவாங்கவுமே தந்தை இந்த ஆசிட் வீச்சு நாடகத்தை திட்டமிட்டுள்ளார். இந்த வழக்கில் மாணவியின் தந்தை தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.