காஃபி டே அதிபர் சித்தார்த்தா உடல் கண்டெடுப்பு! 36 மணி நேர தேடலுக்கு முடிவு

புதன், 31 ஜூலை 2019 (07:31 IST)
பிரபல தொழிலதிபர் 'காஃபி டே' சித்தார்த்தா கடந்த திங்களன்று திடீரென காணாமல் போன நிலையில் அவர் நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது உடலை மீட்புப்படையினர் கடந்த 30 மணி நேரத்திற்கும் மேலாக தேடி வந்தனர். இறுதியில் சரியாக 36 மணி நேரம் கழித்து அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது
 
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சித்தார்த்தா, 'காஃபி டே' உள்பட பல்வேறு தொழிலில் ஈடுபட்டவர். முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனான இவரது நிறுவனங்களில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதன் பின்னர் தனது தொழிலில் பெரும் வீழ்ச்சி அடைந்த சித்தார்த்தா ஒரு கட்டத்தில் மனமுடைந்து தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். 
 
நேற்று முன் தினம் தனது டிரைவருடன் நேத்ராவதி ஆற்றின் பாலத்துக்கு சென்ற சித்தார்த்தா, டிரைவரை சிறிது நேரம் கழித்து வரச்சொல்லிவிட்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளதாக தெரிகிறது. திரும்பி வந்த டிரைவர் சித்தார்த்தா அந்த இடத்தில் இல்லாததால் உடனே அவரது உறவினர்களிடம் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து அவரை கடந்த 36 மணி நேரமாக தேடிய மீட்புப்படையினர் இன்று காலை அவரது உடலை கண்டுபிடித்தனர். 
 
சித்தார்த்தாவின் மறைவு அவரது குடும்பத்தினர்களை மட்டுமின்றி இந்திய தொழிலதிபர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்