உபியில் 9 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்.. தேர்தலை புறக்கணிக்கிறதா காங்கிரஸ்?

Mahendran
புதன், 23 அக்டோபர் 2024 (13:27 IST)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், அவற்றில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி இணைந்து போட்டியிட திட்டமிட்டிருந்த நிலையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள ஒன்பது தொகுதிகளில் ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டதால், கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட காங்கிரஸ் விரும்பவில்லை என்றும், அதற்கு பதிலாக தேர்தலை புறக்கணித்து விடலாம் என்றும் காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சமாஜ்வாதி கட்சி சமாதானப்படுத்தி வருவதாகவும், இரண்டு தொகுதிகளுடன் கூடுதலாக ஒரு தொகுதியை தர முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் தேர்தல் புறக்கணிப்பு முடிவை காங்கிரஸ் கடைபிடிக்குமா அல்லது மூன்று தொகுதிகளில் போட்டியிடுமா என்பது இன்று அல்லது நாளை தெரியவரும்.

9 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்