இந்தியா வரும் அமெரிக்க அதிபருக்கு பரிமாற உள்ள இந்திய உணவுகள் குறித்து கூறியுள்ளார் சமையல் வல்லுனர் சுரேஷ் கிருஷ்ணா.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார். பிறகு குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கும் பயணம் செய்ய இருக்கிறார் ட்ரம்ப். இதற்கான பணிகள் அகமதாபாத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வருகின்றன.
மேலும் குஜராத் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானத்தில் அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவருக்கான உணவுகள் பிரபல நட்சத்திர உணவகம் ஒன்றிலிருந்து வரவழைக்கப்பட உள்ளது.
இதற்கான உணவு பட்டியல் தயாராகியுள்ள நிலையில் சமையல் வல்லுனர் சுரேஷ் கிருஷ்ணா தலைமையில் இந்த உணவுகள் சமைக்கப்பட இருக்கின்றன. இதுகுறித்து பேசியுள்ள சுரேஷ் கிருஷ்ணா “அதிபர் ட்ரம்ப்புக்கு குஜராத்திய பாரம்பரிய உணவுகளை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி குஜராத் இஞ்சி டீ, தானிய பிஸ்கட்டுகள், சோள சமோசா உள்ளிட்ட உணவு வகைகள் அங்கீகரிப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.