இந்த மாதம் இரண்டு முறை சம்பளம்! ரயில்வே ஊழியர்கள் குஷி

Webdunia
வியாழன், 1 ஜூன் 2017 (05:43 IST)
தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான இந்த  மாதச் சம்பளம் இரண்டு முறை டெபாசிட் செய்யப்பட்டதால் ஊழியர்கள் குஷியடைந்தனர். ஆனால் இதுகுறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதால் இரண்டாவது முறை டெபாசிட் செய்யப்பட்ட சம்பளம் திரும்ப கேட்கப்படும் என்று கூறப்படுகிறது.



 


தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்டத்தில் சுமார் 4000-க்கும் அதிகமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் அந்த மாதத்தின் கடைசி நாளில் அவர்களுக்கு சம்பளம் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று மே மாதச் சம்பளம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது.

ஆனால் சம்பளம் டெபாசிட் ஆன அடுத்த ஒருசில மணி நேரத்தில், மீண்டும் தவறுதலாக அதே ஊழியர்களுக்கு சம்பளப் பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. ஒரு மாதத்துக்கு இரண்டு முறை சம்பளமா? என ஊழியர்கள் இன்பஅதிர்ச்சி அடைந்தனர். இது தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டது என்று தெரிந்தும் ஒருசில ஊழியர்கள் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதற்குப் பணம் தேவைப்பட்டதால் உடனடியாக இரண்டு சம்பள பணத்தையும் எடுத்துச் செலவிட்டனர்.

இதுகுறித்து ஒருசில மணி நேரம் தாமதமாக அறிந்து கொண்ட ரயில்வே கணக்குத்துறையினர், உடனடியாக கூடுதலாக டெபாசிட் செய்த பணத்தை திரும்ப தங்களது கணக்குக்கு எடுத்துக் கொண்டனர். ஆனால், முன் கூட்டியே வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்துச் செலவு செய்து விட்ட ஊழியர்களின் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால், அதில் இருந்து கூடுதலாகப் போடப்பட்ட தொகையைத் திரும்பப் பெற முடியவில்லை

எனவே அந்த தொகை அந்த ஊழியர்களின் அடுத்த மாத சம்பளத்தில் கழித்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தவறு எப்படி நடந்தது என்பது குறித்து மதுரைக் கோட்ட அக்கவுன்ட்ஸ் பிரிவு அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.
அடுத்த கட்டுரையில்