அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தை கிழித்து எறிய முயற்சித்தால், நாடும் காங்கிரஸ் கட்சியும் பாஜகவை என்ன செய்யும் என்பதை பாருங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஒடிசா மாநிலம் பலங்கிரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் ஏழை பொது ஜாதியினர் தங்கள் மக்கள் தொகை தெரிந்துகொள்ளும் வகையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதாக தெரிவித்தார்.
இது ஒரு புரட்சிகர நடவடிக்கை என்றும் புரட்சிகர அரசியல் தொடங்கிய பிறகு, மக்களுடைய அரசியல் தொடங்கும் என்றும் ராகுல் காந்தி சூளுரைத்தார். இந்த 2024 தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலானது என்ற ராகுல் காந்தி, பாஜகவின் உயரிய தலைவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் அரசியலமைப்பு புத்தகத்தை கிழித்து எறிந்து விடுவோம் என்று கூறியுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார்.
உலகில் எந்த சக்தியும் இந்தப் புத்தகத்தைத் தொட முடியாது என்றும் அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தை கிழித்து எறிய முயற்சித்தால், நாடும் காங்கிரஸ் கட்சியும் பாஜகவை என்ன செய்யும் என்பதை பாருங்கள் என ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.