தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 22-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்க அப்பல்லோ மருத்துவர்களுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் இணைந்துள்ளனர்.
திடீரென எயிம்ஸ் மருத்துவர்கள் அப்பல்லோ வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்ததும், அது உண்ணிப்பாக கவனிக்கப்பட்டது. மத்திய அரசு தான் உளவு பார்க்க எய்ம்ஸ் மருத்துவர்களை அனுப்பியுள்ளது என பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் மாநில அரசு உதவி கேட்டதின் பேரிலேயே மத்திய அரசு எயிம்ஸ் மருத்துவர்களை அனுப்பியது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
இது குறித்து கூறிய மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, மாநில முதல்வர் என்பதால் அவரது சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ ரீதியிலான உதவியை வழங்குமாறு தமிழக அரசு தரப்பிலும் மருத்துவமனை சார்பிலும் மத்திய சுகாதாரத் துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது என்றார்.
இதனையடுத்துதான் டெல்லியில் உள்ள நிபுணத்துவம் பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் சில மருத்துவர்கள் சென்னைக்கு அனுப்பி வைத்து நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவினருக்குத் தேவையான உதவிகளையும், ஆலோசனைகளையும் எய்ம்ஸ் மருத்துவர்கள் வழங்கி வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா இயல்பு நிலைக்குத் திரும்ப மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என மத்திய அரசுக்கு தகவல் கூறப்பட்டுள்ளது என கூறினார்.