திருப்பதியில் மீண்டும் இலவச டோக்கன் கவுண்ட்டர்! – மகிழ்ச்சியில் பக்தர்கள்!

செவ்வாய், 1 நவம்பர் 2022 (13:16 IST)
திருப்பதியில் கடந்த சில மாதங்களாக இலவச தரிசன டோக்கன் கவுண்ட்டர்கள் செயல்படாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினம்தோறும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்திற்கு வருகை தருகின்றனர். திருப்பதி தரிசனத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்கப்படுகின்றன.

அதுபோல இலவச தரிசன டோக்கன்கள் ஆங்காங்கே கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இலவச டோக்கன் கவுண்ட்டரில் ஏற்பட்டு பெரும் தள்ளுமுள்ளு காரணமாக கவுண்ட்டர்கள் மூடப்பட்டன. எனினும் இலவச தரிசனத்திற்கு டோக்கன் இல்லாமல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ALSO READ: ட்வீட் செய்யப்படும் எழுத்துக்களுக்கான அதிகபட்ச வரம்பை உயர்த்த எலான் மஸ்க் திட்டம்!

இதனால் எண்ணிக்கை வரம்பின்றி பலரும் தரிசனத்திற்கு காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது. இந்நிலையில் 6 மாதங்களுக்கு பின் மீண்டும் திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

பூதேவி கட்டிட வளாகம், விஷ்ணு நிவாஸம் மற்றும் இரண்டாவது சத்திரம் என மூன்று பகுதிகளிலும் 10 கவுண்ட்டர்கள் வீதம் 30 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு இந்த கவுண்ட்டர்கள் மூலமாக செவ்வாய் முதல் வியாழன் வரை தினம் 15 ஆயிரம் டோக்கன்களும், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் 25 ஆயிரம் டோக்கன்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்