புதுச்சேரியில் தொழிலதிபரை மிரட்டும் நோக்கில் தொழிற்சாலை மீது நாட்டு வெடிகுண்டு வீச கூட்டாளியுடன் வந்த பிரபல ரவுடியின் காலிலேயே வெடிகுண்டு தவறி விழுந்ததால் மூன்று பேர் காயமடைந்தனர்.
புதுச்சேரி உசுடு தொகுதிக்குட்பட்ட கிராம பகுதியான ராமநாதபுரம் பகுதியில் இயங்கி வந்த தனியார் தொழிற்சாலை அதிபரை மிரட்டும் நோக்கில் பிரபல ரவுடியான சுகன் தனது கூட்டாளியுடன் சென்று கையில் எடுத்து வந்த நாட்டு வெடிகுண்டை தொழிற்சாலை வாயிலில் நின்று கொண்டிருந்த தொழிற்சாலை அதிபர் மீது வீச முயற்சித்தார்.
அப்போது வெடிகுண்டு எதிர்பாராத விதமாக ரவுடி சுகன் காலில் விழுந்து வெடித்தது. இதில் அருகில் இருந்த தொழிற்சாலை அதிபர் மற்றும் ஊழியர் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்துடித்த தொழிற்சாலை அதிபர் மற்றும் அவரது ஊழியரை வில்லியனூர் காவல் நிலைய போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் வெடிகுண்டு வீசிய ரவுடி சுகன் தனது காலில் வெடிகுண்டு வெடித்து பலத்த காயம் ஏற்பட்ட நிலையிலும் தனது கூட்டாளியுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தப்பி ஓடிய ரவுடி மற்றும் அவரது கூட்டாளியை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்திய நிலையில் சிகிச்சைக்காக காலாப்பட்டு பீம்ஸ் மருத்துவமனைக்குச் சென்ற பிரபல ரவுடி சுகனை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
மேலும் நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து வில்லியனூர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ரவுடி சுகன் மீது கொலை, கொள்ளை ஆள் கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது