லாலு பிரசாத்திற்கு மூன்றரை ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் தீர்ப்பு

சனி, 6 ஜனவரி 2018 (16:32 IST)
மாட்டுத்தீவன வழக்கில் முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத்திற்கு மூன்றரை ஆண்டுகள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

 
பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனத தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் பீகார் முதல் அமைச்சராக  இருந்த போது (1991 முதல் 1994 வரை) கால்நடைத் தீவனம் வாங்கியதில், அரசு கருவூலத்தில் இருந்து 960 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. 
 
அதாவது, பீகாரில் உள்ள பல அரசு கரூவூலங்களிலிருந்து பணம் எடுக்கப்பட்டு முறைகேடு செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. அதில், தியோஹர் அரசு கருவூலத்தில் இருந்து ரூ.89 லட்சம் முறைகேடு செய்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டது.   
 
அந்த வழக்கில் கடந்த டிசம்பர் 23ம் தேதி தீர்ப்பு வெளியானது. தீர்ப்பு வழங்கிய நீதிபதி லாலு பிரசாத் உட்பட 15 பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்தார். மேலும், தண்டனை விவரம் 2018ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி தெரிவிக்கப்படும் எனக் கூறியிருந்தார். அதையடுத்து லாலு உட்பட மற்ற அனைவரும் ராஞ்சியிலுள்ள பிர்ஸா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 
 
ஆனால், கடந்த 3ம் தேதி தீர்ப்பு விபரங்களை நீதிபதி அறிவிக்கவில்லை. அந்நிலையில், தன்னுடைய வயது மற்றும் உடல் நிலை கருதி தனக்கு இரக்கம் காட்ட வேண்டும் என லாலு தரப்பு கோரிக்கை வைத்திருந்தது. 
 
இந்நிலையில், லாலுவுக்கு மூன்றரை தண்டனை வழங்கி நீதிபதி தற்போது தீர்ப்பளித்தார். 
 
இதைத்தொடர்ந்து, தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்