71-வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழில் 'பார்க்கிங்' திரைப்படம் மூன்று விருதுகளை வென்றது என்பதும், ஷாருக்கானுக்கு 'ஜவான்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு விருது வழங்கப்பட்டதை கண்டித்து பினராயி விஜயன் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "கேரளாவை அவமதிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம், தேசிய விருதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது கேரளாவிற்கு எதிரான ஒரு சதி. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியானபோதே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரள மாநிலத்தில் இந்து பெண்களை மதம் மாற்றி தீவிரவாதத்திற்கு பயிற்சி கொடுப்பது போன்ற தவறான தகவல்களை இப்படம் சித்தரிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்தில், அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பலத்த விவாதங்கள் நடைபெற்றன. தற்போது தேசிய விருது கிடைத்திருப்பது இந்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.