டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்ததால் மக்கள் மூச்சுவிடுவதற்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டது. இது டெல்லியில் மட்டுமல்லாமல் ஹரியானா, பஞ்சாப் மாநில பகுதிகளிலும் அதிகரித்தது. இந்தியாவெங்கும் காற்று மாசுபாடு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
காற்று மாசுபாடு தொடர்பான வழக்கை விசாரித்தி வரும் உச்ச நீதிமன்றம் காற்று மாசு அதிகரித்துள்ள மாநிலங்களான ஹரியானா, பஞ்சாப், டெல்லி மாநில தலைமை செயலாளர்களை ஆஜராகும்படி உத்தரவிட்டது.
இன்று ஆஜரான தலைமை செயலாளர்களிடம் நீதிபதிகள் சரமாரியான் கேள்விகளை எழுப்பினர். டெல்லியில் சட்டவிரோதமான கட்டுமானங்களை தடுக்க, பெருகும் குப்பைகளை அகற்ற என்ன திட்டத்தை செயல்படுத்தினீர்கள்? இப்படி எதுவும் செய்யாமல் இருப்பதற்கு எதற்காக பதவியில் இருக்க வேண்டும்? என டெல்லி தலைமை செயலாளரை வறுத்தெடுத்தனர் நீதிபதிகள்.
விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு 100 ரூபாய் வழங்கி பயிர் எரிப்பு சம்பவங்களை கட்டுக்குள் கொண்டு வருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க பயிர் எரிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த விரிவான திட்டத்தை 3 மாதங்களுக்கு உருவாக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.