நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

செவ்வாய், 9 மே 2017 (11:20 IST)
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்ற உத்தரவான மனநல பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காததால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு பாய்ந்துள்ளது. இதனால் அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 
 
முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும், தற்போதைய கொல்கத்தா உஅர் நீதிமன்ற நீதிபதியுமான நீதிபதி கர்ணன், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொல்கத்தா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு ஒன்றை சமீபத்தில் அறிவித்தார்.
 
இந்த உத்தரவை அடுத்து அவருக்கு மனநிலை பரிசோதனை செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் மனநல பரிசோதனைக்கு சம்மதிக்காத நீதிபதி கர்ணன் மருத்துவர்களையும், காவலர்களையும் திருப்பி அனுப்பினார்.
 
இதனையடுத்து தலைமை நீதிபதி உட்பட 8 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி கர்ணன் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் தன்னை மனநல சோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்ட எட்டு நீதிபதிகளுக்கும் மனநல பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
 
நீதிபதி கர்ணனின் இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மனநல பரிசோதனைக்கு ஒத்துழைக்காத நீதிபதி கர்ணனுக்கு நீதிமன்ற அவமதிப்பின் காரணமாக 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்