புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த காரணத்தினாலும், மொகரம் பண்டிகையை முன்னிட்டு புதுவை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த காரணத்தினாலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த ஜூலை மாதம் வரை சுமார் 12 வேலை நாட்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த 12 நாட்களில் திட்டமிடப்பட்டிருந்த பாடத்திட்டங்கள் முடிக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், அதை ஈடு செய்ய, எதிர்வரும் 12 சனிக்கிழமைகளில் கட்டாயம் பள்ளிக்கூடம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது புதுவை மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள புதுவையின் பள்ளி கல்வி இணை இயக்குனர் சிவகாமி, பள்ளிக்கூடம் நடைபெற உள்ள அந்த 12 சனிக்கிழமைகளில், என்னென்ன கிழமைகளுக்கான பாடத்திட்டம் பின்பற்ற வேண்டும் என்பதையும் அறிவித்துள்ளார்.