சபரிமலை கோவிலுக்கு ஆண்டுதோறும் சீசன் காலத்தில் மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் 26 ஆம் தேதி, மகர விளக்கு பூஜை அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறும்.
இந்த நிலையில், பக்தர்களின் வசதிக்காக சபரிமலை சன்னிதானத்திற்கு செல்லவும், சரக்குகளை கொண்டு செல்வதற்காகவும் ரோப் கார் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசனை கூட்டத்தில் வனத்துறை, வருவாய்துறை, தேவஸ்தானம் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் ரோப் கார் திட்டம் குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், பணிகள் விரைவில் தொடங்கி 2027 ஆம் ஆண்டு சபரிமலை சீசனுக்குள் முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வனவிலங்குகளுக்கு இடையூறு இல்லாமல், ரோப் கார் கோபுரங்கள் அமைக்கப்படும். 30, முதல் 40 மீட்டரில் உயரத்தில் ஐந்து கோபுரங்கள் அமைக்கப்படும் என்றும், சுமார் 380 மரங்கள் வெட்டப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்காக ஒன்பது ஹெக்டர் நிலம் காடுகள் வனத்துறைக்கு ஒதுக்கப்படும் என்றும், நடப்பு சீசனுக்குள் இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த திட்டம் அமலுக்கு வந்த பிறகு, சன்னிதானத்தில் இருந்து பாம்பைக்கு 10 நிமிடங்களில் விரைவாக செல்ல முடியும் என்றும், கார் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்தையும் இந்த ரோப் காரில் கொண்டு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.