காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தின் பதிலடி தாக்குதல் காஷ்மீரில் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் சுற்றுலா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானில் இயங்கி வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் விசாக்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தான் மக்களை இந்தியாவில் இருந்து வெளியேறுமாறு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடி நடவடிக்கைகளில் இந்தியா தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். பயங்கரவாதிகள் குறித்து துப்பு அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது காஷ்மீரின் உதம்பூர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே சண்டை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காஷ்மீர் மாநில காவல்துறை தகவலின்படி, டுடு பசந்த்கர் பகுதியில் பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளின் மறைவிடத்தில் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிகிறது. இதனால் காஷ்மீரில் மேலும் பரபரப்பு நிலவி வருகிறது.
Edit by Prasanth.K