கொரோனா சிகிச்சை: மருத்துவமனை கட்ட முன்வந்த ரிலையன்ஸ்!
செவ்வாய், 24 மார்ச் 2020 (11:15 IST)
ரிலையன்ஸ் பௌண்டேஷன் 2 வார காலத்துக்குள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க புதிய மருத்துவமனையைக் கட்ட உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பல லட்சம் மக்கள் உலகம் முழுவதும் பாதித்துள்ள நிலையில் இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் 30 மாநிலங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 471லிருந்து 492 ஆக உயர்ந்துள்ளது. இதில் 451 பேர் இந்தியர்கள் எனவும், 41 பேர் வெளிநாட்டினர் எனவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க தனி மருத்துவமனை ஒன்ரை கட்ட உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மும்பை மாநகராட்சியுடன் இணைந்து ரிலையன்ஸ் பௌண்டேஷன் நிறுவனம் இரண்டு வார காலத்துக்குள் புதிய மருத்துவமனையைக் கட்ட உள்ளது. இந்த மருத்துவமனையில் கொரோனா பாதித்த 100 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும்.
இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனம் அளிக்கும் நிதியில் கட்டப்படும் முதல் மருத்துவமனை இது. இந்த மருத்துவமனை தரமான கட்டுமானத்துடன் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.