ஆந்திராவில் பரவிய மர்மக் காய்ச்சல் பின்னணி என்ன? அரசு மருத்துவரின் பதிவு!

வியாழன், 10 டிசம்பர் 2020 (10:56 IST)
ஆந்திராவில் கடந்த சில நாட்களாக மர்மக் காய்ச்சலால் 500 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்த விரிவான பதிவு

ஆந்திர மாநிலம் எலுரு பகுதியில் மக்கள் மர்மமான நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு வருவது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் வாந்தி, மயக்கம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுவதுடன் வித்தியாசமான குரலில் அலறுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நோய் எதனால் பரவுகிறது என்பது புரியாமல் மருத்துவர்கள் குழம்பியுள்ள நிலையில் இந்த மர்ம நோயால் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 570 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரடியாக சென்று அங்கு பாதிக்கப்பட்டவர்களை பார்த்துள்ளார்.

இந்நிலையில் இந்த காய்ச்சலுக்கான காரணம் என்ன என்பது குறித்து தமிழக அரசு மருத்துவர் ஃபருக் அப்துல்லா தனது சமுகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவு
ஆந்திர பிரதேசத்தில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டமான எலூருவில் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி மக்களிடையே விநோதமான நோய் ஒன்று தோன்றியது .அந்த நோய் தன்மை ஆட்பட்டவர்களுக்கு வலிப்பு தற்காலிக சுயநினைவு இழப்பு குமட்டல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டன.

ஒன்று இரண்டு என்று மருத்துவமனைகளில் அட்மிசன் ஆகத் தொடங்கியவர்களின் எண்ணிக்கை சில நூறாகி இன்றுவரை கிட்டத்தட்ட 500 பேர் இந்த வகை அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுள் ஒருவர் மரணம் அடைந்திருக்கிறார். இருநூறுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் இருந்து குணமாகி வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

ஆரம்பத்தில் இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் தொற்று நோயாக இருக்குமோ? என்ற அச்சம் இருந்தது ஆனால் நோயின் அறிகுறிகளுக்கு உட்பட்டவர்களுக்கு எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் கொரோனா தொற்றோ ஏனைய தொற்று நோய்களோ இல்லை என்பதை அரசு சுகாதாரத்துறை உறுதி செய்தபின் இந்த அசாதாரண சூழ்நிலை என்பது அந்த எலூரு மாவட்டத்துக்கு மட்டுமே உட்பட்ட விசயம். இதில் பிற மாவட்டங்களுக்கோ மாநிலங்களுக்கோ அபாயம் தரும் தொற்றுப்பரவல் இல்லை என்ற நற்செய்தி கிடைத்தது.

இருப்பினும் இதுபோன்ற ஒரு நோய் திடீர் என்று ஒரு ஊரில் பரவினால் உலக சுகாதார நிறுவனத்துக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது விதி. அதன்படிய நமது கூட்டாட்சி அரசு உலக சுகாதார நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்து அவர்களின் இந்தியப் பிரதிநிதிகள் வந்து கள ஆய்வு செய்து இது தொற்றுப்பரவல் இல்லை என்று தொடக்க நிலை சான்று அளித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களிடம் ரத்த மாதிரிகள், அவர்களின் வியர்வை, நாசித்தடவல், எச்சில் போன்ற அனைத்தையும் எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டது.

மேலும் எலூரு மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மக்களுக்கு வழங்கப்படும் பொது நீர் விநியோக நீர் ஆதாரங்கள் , பால் போன்றவற்றிலும் கிருமிகள் மற்றும் ஒவ்வாத பொருட்கள் இருக்கின்றனவா? என்ற ஆராய்ச்சி நடந்தது. ஆய்வின் முதற்கட்ட முடிவில் புதுடெல்லி எய்ம்ஸைச் சார்ந்த ஆய்வுக்குழு இந்த அறிகுறிகள் யாவும் நிக்கல் மற்றும் ஈயம்( lead) ஆகியவை நீர் ஆதாரங்களில் கலந்ததால் உருவானதாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டோரின் உதிரத்தில் ஈயம் மற்றும் நிக்கல் ஆகிய கடின உலோகங்களின் அளவு சிறிது அதிகமாகக் காணப்படுகின்றது. மக்களுக்கு குடிநீர் தரும் நீர் ஆதாரங்களில் பேட்டரிகள் போன்ற கழிவுகளை போடுவதால் இந்த விளைவு நேர்ந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். எனினும் மரணம் உண்டாக்குவதற்கும் குறைவான அளவுகளில் (SUB LETHAL DOSE)உலோக மாசு ஏற்பட்டுள்ளதால் மக்கள் உயிரிழப்பு அபாயகரமான அளவில் இல்லாமலும் இதனால் ஏற்படும் அசவுகரியங்களில் இருந்து விரைவில் மீள்கின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்