ஏற்கனவே கொரோனா விவகாரத்தில் பாஜகவின் மத்திய அரசு சரியாக செயல்படவில்லை என தொடர்ந்து புகார் குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்த காங்கிரஸ் தற்போது சீன விவகாரத்தில் கவனம் திருப்பியுள்ளது. தொடர்ந்து சீன விவகாரத்தில் பாஜக குறித்து காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டுவதும், அதற்கு பதில் கேள்வி பாஜக எழுப்புவதும் அன்றாட நிகழ்வாகி உள்ளன.
சமீபத்தில் பிரதம மந்திரி நிதியில் சீன நிறுவனங்கள் பணம் அளித்துள்ளதாக ராகுல் காந்தி கேள்வியெழுப்ப, காங்கிரஸ் காலத்தில் சீனாவிடம் நிதி பெற்றது குறித்து பாஜக கேள்வியெழுப்பு பெரும் விவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது ஒரு வீடியோவை ராகுல் காந்தி தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி இந்தியாவில் கொரொனா கட்டுபடுத்தப்பட்டுள்ளதாக பேசுவதும், அதேசமயம் கொரோனா நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை காட்டும் வரைபடமும் உள்ளது.
அதை பதிவிட்டுள்ள ராகுல் காந்தி “எதிர்காலத்தில் ஹார்வார்டு பிசினஸ் ஸ்கூலில் இந்த தோல்விகள் பாடமாக இருக்கும். கொரோனா, பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி” என கூறியுள்ளார். இவையெல்லாம் தோல்வியடைந்தவை என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.