மத்திய பிரதேசம் மாநிலத்தில் சிறைக் கைதிகளை மசாஜ் சென்டருக்கு இரண்டு காவலர்கள் அழைத்துச் சென்ற நிலையில், அப்போது சிறைக் கைதி தப்பிவிட்டதால் அந்த இரண்டு காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி, 18 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த ரோகித் சர்மா என்ற குற்றவாளியை போலீசார் கைது செய்த நிலையில், அந்த குற்றவாளியை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி ரோகித் சர்மாவுக்கு காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து சிறை காவலர்கள் இருவர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின், நேராக சிறைச்சாலைக்கு வராமல், இருவரும் சிறைக் கைதியை அழைத்துக்கொண்டு மசாஜ் சென்டருக்கு சென்றுள்ளனர்.
மசாஜ் சென்டருக்கு வெளியே கைதியை உட்கார வைத்துவிட்டு, காவலர்கள் மசாஜ் செய்து கொண்டிருந்த நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கைதி ரோகித் சர்மா தப்பிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர்கள் தங்கள் மேல் அதிகாரிக்கு தகவல் கொடுத்த நிலையில், இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும், தப்பியோடிய கைதி ரோகித் சர்மாவை தனிப்படை அமைத்து தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், காவலர்களின் பொறுப்பேற்ற செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.