மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் முன்னாள் உறுப்பினரும், கர்நாடக மாநிலம் ஹாசன் மக்களவை தொகுதியின் உறுப்பினருமான பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாயின. இதையடுத்து அவர் மீது பெண்கள் சிலர் காவல் துறையில் புகார் அளித்தனர்.
அதோடு கர்நாடக மகளிர் ஆணையத்துக்கு அவர் இடம்பெற்றுள்ள 300 ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவ் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஆளும் காங்கிரஸ் அரசு இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்றியது. பிரஜ்வல் வெளிநாடு தப்பி சென்ற நிலையில் சிறப்பு குழுவின் முன்பு ஆஜராக அவரது சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.
இந்நிலையில், பிரஜ்வலின் பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பதற்கு ஏதுவாக 6360938947 என்ற ஹெல்ப்லலைன் எண்ணை எஸ்ஐடி வெளியிட்டது. இதனை எஸ்ஐடி தலைவரும், காவல் துறை கூடுதல் டிஜிபி-யுமான பி.கே.சிங் அறிவித்தார்.
பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் இடம்பெற்றிருக்கும் வீடியோக்களை சமூக வலைதளம் அல்லது தனிப்பட்ட முறையில் மெசஞ்சரில் யாரும் பகிர வேண்டாம் என்றும் அப்படி செய்பவர்களை எளிதில் அடையாளம் கண்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.