ஆபாச வீடியோ புகாரில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 26-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சரும், ஜே.டி-எஸ் தலைவருமான ஹெச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா காங்கிரஸின் ஷ்ரேயாஸ் எம்.படேலை எதிர்த்துப் போட்டியிட்டார். கர்நாடகாவில் ஜே.டி(எஸ்) பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கிறது.
தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு, பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்கள் இணையத்தில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், மாநில மகளிர் குழுவின் தலைவி நாகலட்சுமி சவுத்ரி, அந்த வீடியோ தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதினார்.
அதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க அரசு முடிவு செய்திருக்கிறது என்று தெரிவித்தார். இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது.