தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த வருடம் செப்டம்பர் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது பல மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், தேசிய, மாநில கட்சி தலைவர்கள் என பலர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்து சென்றனர். ஆனால் பிரதமர் மோடி ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது வரவே இல்லை.
இதனை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தற்போது சுட்டிக்காட்டி ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவரது உடல்நிலை குறித்து பிரதமர் மோடிக்கு நான்றாகவே தெரியும், அதனால் தான் அவர் வரவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று நீலகிரி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ஜெயலலிதா உடல்நிலை குறித்து பிரதமர் மோடிக்கு நன்றாகத் தெரியும், அதனால்தான் மருத்துவமனையில் ஜெயலலிதாவைப் பார்க்க அவர் வரவில்லை. அந்த உண்மைகளை மறைக்கவே தற்போது புதிய ஆளுநரின் நியமனம் நடைபெற்றுள்ளது.
இடைத்தேர்தல்களின் போது பயன்படுத்திய ஜெயலலிதாவின் கைரேகைகளும் பொய்தான். முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அரசின் சார்பில் மருத்துவக் குறிப்புகள் வெளியாகின. ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ஏன் மருத்துவக் குறிப்புகள் வெளியிடப்படவில்லை?. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது ஜெயலலிதாவின் மரணம் குறித்து கவலைப்படவில்லை.