மத்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை 24 சதவீதம் அதிகரித்துள்ளதாக நேற்று அறிவித்துள்ளது. செலவுப் பணவீக்கக் குறியீட்டு அடிப்படையில் இந்த உயர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், 2025 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.
தற்போது எம்.பி.க்களின் மாத சம்பளம் ரூ.1 லட்சம் என இருக்கும் நிலையில், ஏப்ரல் 1 முதல் ரூ.1.24 லட்சமாக உயரும். கூடுதலாக, எம்.பி.க்களுக்கான தினசரி செலவு படி, ஓய்வூதியமும் அதிகரிக்கப்படுவதாக நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், எம்.பி.க்களுக்கான தினசரி படி ரூ.2,000 இலிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி.க்கள் பெறும் ஓய்வூதியம் மாதம் ரூ.25,000 இலிருந்து ரூ.31,000 ஆக உயர்வு பெறும். மேலும், 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த முன்னாள் எம்.பி.க்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியம் ரூ.2,000 இலிருந்து ரூ.2,500 ஆக அதிகரிக்கப்படுகிறது.
இந்த சம்பள மற்றும் ஓய்வூதிய உயர்வுகள் வருமான வரிச் சட்டம், 1961-இன் கீழ் குறிப்பிடப்பட்ட செலவுப் பணவீக்கக் குறியீட்டு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் என நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.