போலி பாஸ்போர்ட், விசா பயன்படுத்தினால் சிறை! வெளிநாட்டினர் நடமாட்டம் கண்காணிப்பு! - மத்திய அரசின் புதிய சட்டம்!

Prasanth Karthick

திங்கள், 17 மார்ச் 2025 (09:16 IST)

இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர் முறைகேடாக உள்நுழைவதை தடுக்கவும், அவர்களை கண்காணிக்கவும் மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வர உள்ளது.

 

இந்தியா பல்வேறு வகையான கலாச்சாரங்கள் கொண்ட நாடாக இருக்கும் நிலையில் பல நாடுகளை சேர்ந்த மக்களும் இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொள்வது அதிகமாக உள்ளது. மேலும் அண்டை நாடுகளில் இருந்து சிலர் உரிய ஆவணங்கள் இன்று நுழைவதும் தொடர் கதையாக உள்ளது.

 

இந்நிலையில் குடியேற்றம், வெளிநாட்டினர் தொடர்பான விவகாரங்களை நெறிப்படுத்த உதவும் பாஸ்போர்ட் சட்டம், வெளிநாட்டினர் பதிவு சட்டம் உள்ளிட்ட 4 சட்டங்களுக்கு பதிலாக புதிதாக குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025 என்ற மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் மக்களவையில் தாக்கல் செய்துள்ளது.

 

அதன்படி, இந்தியாவில் நுழைவது, தங்குவது ஆகியவற்றுக்கு போலி பாஸ்போர்ட் விசாவை பயன்படுத்தினால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். உரிய ஆவணங்கள் இல்லாமல் பயணிப்பவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

 

இதுதவிர வெளிநாட்டினர் வந்து தங்கும் தகவல்களை நட்சத்திர விடுதிகள், ஓட்டல்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவை தெரிவிப்பது கட்டாயமாக்கப்படுகிறது. இதன்மூலம் அவர்களது நடமாட்டத்தை கண்காணிக்கவும், அதிகமான வெளிநாட்டினர் உலாவும் பகுதிகளை கண்காணிப்பு வளையத்திற்குள்ளும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்த பிறகு அது தொடர்பான 4 பழைய சட்டங்களும் ரத்து செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்